பையன் இல்லாதவர்களுக்கு, ஶாஸ்த்ரத்தில் இவரில்லை என்றால் இவர், அவரில்லை என்றால் இவர் எனப் பட்டியலிட்டு சொல்லியிருக்கிறது. அவ்வகையில் பிள்ளை இல்லையென்றால் பேரன் (தௌஹித்ரன்) இருந்தால், அவனே கைங்கர்யங்கள் செய்வது உத்தம கல்பம். அவரில்லை எனில் இறந்தவரின் பெண்ணின் கைப்புல்லை வாங்கி மாப்பிள்ளை காரியங்கள் செய்யலாம் ஏனெனில் பெண்தான் கர்தா ஆவார்.
அப்பா அம்மாவிற்கு பெண் பிள்ளைதான் இருக்கிறார் என்றால், முன்னர் குறிப்பிட்டது போல் பேரனிருந்தால் அவனே செய்யலாம் இல்லையென்றால் மாப்பிள்ளை வார்ஷிக ஶ்ராத்தம் செய்யலாம். இப்படி ஒவ்வொரு கைங்கர்யத்தை அவர் ஏற்கும்போது வருடாவருடம் செய்யவேண்டும் என்பது அவரின் கர்தவ்யமாக ஆகுகிறது.
தாத்தா செய்த பாவம் புண்ணியம் நேரடியாக தலைமுறைக்கே என்பது கிடையாது. அவரவர்கள் கர்மவினைப் பயனை அவரவர்கள்தான் அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு கர்ம விசேஷத்தினால் ஒருவருடன் சம்பந்தப்பட்ட இந்தப் பிறவி நமக்கு கிடைக்கின்றது. தாத்தா என்பவர் நிறைய பாவங்கள் செய்துவிட்டு பரமபதித்து விட்டால் அந்தப் பாவம் எல்லாம் அவர் பிள்ளைக்கோ பேரனுக்கும் வந்த விடும் என்பது கிடையாது. தாத்தா பண்ணிய கர்மாவிற்கு அடுத்த ஜன்மாவில் என்ன தண்டனையோ அல்லது நல்லதோ அனுபவிக்க வேண்டுமோ அதை அவர் அனுபவிப்பார். அது அவருக்கு ஏற்படும். இந்தப் பிள்ளையோ பேரனோ அந்தப் பாவம் பண்ணவரோடு சம்பந்தப்பட்டு ஒரு இடத்தில் வந்து பிறந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய கர்ம வினைப்பயன் இந்தச் சம்பந்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதனால் அவரவர்கள் கர்ம வினைப் பயன் என்பதுதான் உண்மையே தவிர இவரால் நமக்கு கஷ்டம் என்று நினைக்கவேண்டாம். நாம் பண்ணிய கர்மா நம்மை ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்க்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த ஒரு ஶரீர பந்தம் ஏற்பட்டாலும் அது அவரவர்கள் கர்மாவிற்கு ஏற்றார்போல் ஏற்பட்டதுதான். கணவன் மனைவி என்ற பந்துத்வமும் அப்படி ஏற்பட்டதுதான். இவருக்கு இவர் என்று எம்பெருமான் விதித்துக் கொண்டு சேர்க்கின்றான். அவரவர்களுடைய கர்மாவிற்குப் பலனளிக்க எந்த இடத்திற்குப் போய் சேர்ந்தால் அந்தப் பலன்கள் கிடைக்குமோ அதன்படி எம்பெருமான் சேர்க்கின்றான்.