1A. பஞ்ச ஸம்ஸ்காரம் என்பதை எளிய வகையில் என்னவென்று சொல்லி விளக்கலாம்? இது ஒரு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கான சடங்கு என்று கூறலாமா? B. அடியேனின் சம்பந்தி தென்கலை ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஸ்வயமாசார்யர்கள். ஆனால் அவர்கள் பஞ்சஸம்ஸ்காரம் ஏதும் செய்து கொள்ளவில்லை. அடியேனின் பெண், மாப்பிள்ளை மற்றும் பேரக்குழந்தைகள் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துக்கொள்ள ஆசை ஆனால் அவர்கள் அகத்துப் பெரியவர்கள் அதைத் தடுக்கின்றனர். அவர்களுக்கு என்னவென்று சொல்லி புரியவைப்பது? தெளிவிக்கவும். C. ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராகமல் மற்றொருவர் தடுப்பது சரியா? D. மேலும் எம்பெருமானின் ப்ரீதியைப் பெற்று மோக்ஷம் அடைய பக்தி/ப்ரபத்தி தான் உபாயம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அடியேனின் ஆசார்யனிடம் ப்ரார்தித்து எனது பெண், மாப்பிள்ளை, பேரக்குழந்தைகளுக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் ஆகாமலே ப்ரபத்தி செய்ய முடியுமா? E. தென்கலை ஸம்ப்ரதாயத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யும்போதே ப்ரபத்தியும் செய்வார்களா?

பஞ்ச ஸமஸ்காரம் என்பதை ஒரு சடங்கு என்று சொல்லலாம். ஸம்ஸ்காரம் என்றாலே Refinement என்று அர்த்தம். அதாவது ஒரு கார்யத்தை நாம் பண்ணுவதற்கான தகுதியை அளிக்கக்கூடிய செயல். இப்பஞ்சஸம்ஸ்காரமானது எம்பெருமானுக்கு நாம் கைங்கர்யம் செய்யக்கூடிய தகுதியை அளிக்கிறது என்று சொல்லலாம்.
இப்பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொண்டால்தான் பகவத் கைங்கர்யம் செய்ய தகுதியுடையவர்களாக ஆகிறோம். ஏன் பகவத் கைங்கர்யம் செய்யவேண்டுமென்றால், அவர்தான் நமக்கு உத்தேஶ்யம். ஒரு பத்னி பதிக்கு சிஸ்ருஷை செய்வதுபோல் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யவேண்டும். ஆசையாக செய்தல்வேண்டும். அதற்காகவே நாம் ஏற்பட்டுள்ளோம் என்ற நினைப்போடு பண்ணவேண்டும். அப்படியாக நாம் செய்யும்போது அவருக்குப் பிடித்தாற்போல் பண்ணவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதற்காக நாம் செய்துகொள்ளும் ஸம்ஸ்காரமே பஞ்சஸம்ஸ்காரம்.
இதை லௌகீக ரீதியில் சொல்லவேண்டுமென்றால் நமக்குப் பிடித்தவர் நம் அகத்திற்கு வருகிறார் என்றால் அவருக்குப் பிடித்த உணவை பண்ணவோம். மேலும் அவ்வுணவிற்குத் தேவையானவற்றைச் சம்பாதித்து கருத்துடன் தளிகை பண்ணி, அக்கறையுடன் அவருக்கு பரிமாறுவோம் அல்லவா. அதேபோல்தான் பகவான் என்பவர் நமக்கு மிகவும் பிரியமானவர், அவருக்கு ப்ரீதியோடு கைங்கர்யம் பண்ண வேண்டுமென்றால், ஸமர்பிக்க வேண்டுமென்றால் என்ன ஏற்பாடு செய்யவேண்டுமோ அந்த ஏற்பாட்டில் (இங்கு தகுதியில்) ஒன்றுதான் இந்தப் பஞ்சஸம்ஸ்காரம் என்று சொல்லி புரியவைக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக ஆகாமல் மற்றொருவர் தடுப்பது நிச்சயம் தவறுதான்.
பஞ்ச ஸம்ஸ்காரம் ஆகாமலேயே ஆசார்யர்களுடைய அனுமதி இருந்தால் ப்ரபத்தி செய்யமுடியும். சின்னக்குழந்தைக்குக்கூட பண்ணலாம். ஆனால்கூட ஆசார்யன் என்ன சொல்கிறாரோ அதன்படிச் செய்யவும்.
தென்னாசார்யர் ஸம்ப்ரதாயத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்யும் போதே ப்ரபத்தியும் நடக்கிறது என்று சொல்லுவர்கள்தான். அது நடக்கிறதா, அது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு நாம் போகவேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top