ஒரு ப்ரஹ்மச்சாரி உபநயனமானவுடன் வேதாத்யயனம் ஆரம்பித்தால் ஒரு 15 வயதிற்குள் வேதாத்யயனம் பூர்த்தியாகிவிடும். வேதாத்யயனம் செய்யும்போதே அடிப்படை ஸம்ஸ்க்ருதமும் சேர்த்து கற்கவேண்டும். அதில் வ்யாகரணம் முதலான வேதத்தின் அங்கங்களெல்லாம் படிக்கவேண்டும் என்றிருக்கிறது. மேலும் வேதாத்யயனம் என்றாலே சாங்கவேதாத்யயனம்தான் அங்கத்தோடு கூடிய வேதாத்யயனம்தான். அதில் வ்யாகரணம் என்ற அங்கத்தையும் சேர்த்துதான் வேதாத்யயனம் படிக்கவேண்டும் என்ற கணக்கு.
இதையெல்லாம் படித்து முடித்த பிறகு ந்யாய ஶாஸ்த்ரம், விஶிஷ்டாத்வைத்த ஶாஸ்த்ரம் முதலானது, காலக்ஷேபம் போன்றவையெல்லாம் பண்ணமுடியும்.
7 வயதில் உபநயனம் பண்ணி ஆரம்பித்தால் இதையெல்லாம் படிக்க நன்றாகச் சமயம் கிடைக்கும் மேலும் தாராளமாகப் படிக்கலாம்.
இதனுடைய முக்கியத்துவம் என்னவென்றால், வேதாத்யயனம் பண்ணவேண்டும் என்று ஶாஸ்த்ரம் இருக்கிறது. மேலும் ந்யாயம், மீமாம்ஸா, வ்யாகரணம் எல்லாம் படித்தால்தான் விஶிஷ்டாத்வைத்த அதாவது நம் ஸித்தாந்தம் நம் மதம், நம்முடைய தரிசனம், நம்முடைய அனுஷ்டான வ்யவஸ்தைகள், ஆசார்ய அனுஷ்டானங்கள் இவையெல்லாம் இந்த ஶாஸ்த்ரங்கள் படித்தால்தான் புரியும் இல்லாவிட்டால் பூர்த்தியாக புரியாது. நாம் படித்தால்தான் இது புரியும், அப்படியிருந்தால்தானே அதை அனுஷ்டிக்க முடியும் ஆகையால் அவை படிக்கவேண்டும்.
பொதுவாக நம் ஸம்ப்ரதாயத்தில் பெண் குழந்தைகள் ஸ்தோத்ரங்கள், திவ்ய ப்ரப்ந்தங்கள் எல்லாம் சொல்லலாம். ஶாஸ்த்ரம் வாசிப்பது வழக்கத்தில் கிடையாது. இந்தக் காலத்தில் ந்யாயம் போன்ற சாமான்ய ஶாஸ்த்ரம் சொல்லிக்கொடுக்கிறார்கள். அப்படியாக ஸாஹித்யம், அலங்கார ஶாஸ்த்ரம் அவர்கள் படிப்பது தவறில்லை.