.எம்பெருமானுக்கு நாம் ஏற்றும் தீபங்களில் சில சந்தேகங்கள்: 1. திருமலையப்பனுக்குப் புரட்டாசி சனிக்கிழமை மாவிளக்கு ஏற்றுகிறோம். இதை என் இஷ்ட எம்பெருமானான ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்றாலாமா? அல்லது ஸ்ரீரங்கநாதனுக்கு உரித்தான பங்குனி ரேவதி அன்றோ அல்லது வைகுண்ட ஏகாதசி அன்று ஏற்றலாமா? தாயாருக்கு ஆடி/தை வெள்ளிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றலாமா? 2. கும்ப/கட தீபத்தின் ஏற்றம் என்ன? விசேஷ நாட்களில் நாம் நித்யம் ஏற்றும் அகல் விளக்கிற்கு பதில் கும்பத்தில் நீர் நிரப்பி அதில் விளக்கு ஏற்றலாமா? 3. புருஷர்கள் அடுக்கு தீபத்தை எம்பெருமானுக்கு காட்டிய பின் தீபத்திரி கருகாமல் இருக்க அணைக்கலாமா? 4. வடதேசம் போல் நம் ஸம்ப்ரதாயத்தில் விசேஷ நாட்களில் அகண்ட தீபம் ஏற்றும் வழக்கம் உண்டா? உண்டு என்றால் எப்படி ஏற்றவேண்டும்?

திருமலையப்பனுக்கு புரட்டாசி சனிக்கிழமை மாவிளக்கேற்றுவது, ஸம்ப்ரதாயத்தில் இருக்கிறது விசேஷமாக பலபேர் செய்துகொண்டிருக்கிறார்கள். அதை ரங்கநாதனுக்கு ஏற்றாலாமா என்றால் அப்படி ஒரு வழக்கம் இருந்தால் செய்யலாம். அப்படியிருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. திருவேங்கடமுடையானுக்கு ஸம்ப்ரதாயத்தில் பண்ணிக்கொண்டிருக்கிறோம். ஸம்ப்ரதாயத்தில் இல்லாததைப் புதிதாகப் பண்ணவேண்டுமா? ஆரம்பிக்க அவசியமா என்றும் அந்த ரீதியில்தான் பக்தியை வெளிப்படுத்தணுமா என்றெல்லாம் இருக்கிறது.
இவையெல்லாம் அந்தந்த குலத்தில், அந்தந்த க்ருஹத்தில் பல வழக்கங்களெல்லாம் உள்ளது. ஆகையால் உங்க அகத்தில் இதுபோன்று வைகுண்டயேகாதசி தினங்களில், ரங்கநாதனுக்கென்று விளக்கேற்றும் வழக்கமிருந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் புதிதாக ஆரம்பிக்கவேண்டாம். அவரவர் வழக்கத்தில் இருப்பதைச் செய்தால் போதும்.
பலவிதமான தீபங்களில் கடதீபம் என்று ஒன்றிருக்கிறது. கடத்தில் தீபம் ஏற்றி அதைப் பெருமாளுக்கு கட ஆரத்தியாக ஸமர்பிப்பது. கோயில்களில் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகமத்தில் சொல்லியிருக்கிறபடியால் அந்த கடதீபம் விசேஷம். கடம் என்பதும் தீபம் என்பதும் மங்களகரமான ஒன்று இரண்டும் சேரும்போது மிகவும் மங்களகரமாக இருக்கும் என்பதுதான் தாத்பர்யம்.
விசேஷ நாட்களில் நாம் நித்யம் ஏற்றும் அகல் விளக்கிற்குப் பதில் கும்பத்தில் நீர் நிரப்பி அதில் விளக்கு ஏற்றவேண்டும் என்ற அவசியமில்லை. நம் வழக்கம் என்ன இருக்கிறதோ அதைச் செய்தால் போதுமானதாகும். புதிதாக எதையும் செய்யவேண்டியதில்லை.
பொதுவாகத் தீபத்திரியை அணைத்தல் கூடாது. ஆனால் அடுக்குதீபத்தில் முழுவதும் கருப்பாகும் ஒரு கஷ்டமிருக்கிறது. பொதுவாக அடுக்குதீபம் ஏற்றி பெருமாளுக்கு ஸமர்ப்பித்தவுடன் தீபத்தை வெளியே எடுத்துக்கொண்டு போய் அணைக்கிறார்கள் ஏனென்றால் பெருமாளுக்கு நேரே மற்றும் நாலுபேருக்கு முன்னர் தீபத்தை அணைக்கக்கூடாது. அதைப் பக்குவமாகச் செய்தல்வேண்டும்.
அகண்டதீபம் என்பது இப்போதும் பல கோயில்களில் இருக்கிறது. கண்டம் என்றால் விட்டுபோதல்/அணைதல் என்று அர்த்தம். விட்டுப்போகாமல் எப்போதும் எரிந்துகொண்டிருத்தல் என்பது அகண்டதீபமாகும். சில க்ருஹங்களில் கூட அகண்டதீபம் வைத்துக்கொண்டிருப்பார்கள். அது விசேஷம்தான் அதைச் செய்யலாம். அகண்ட தீபமென்றால் தமிழில் அணையாவிளக்கு என்றாகும். தனியாக பெரியவிளக்கு என்றெல்லாம் இல்லை. எப்போதும் ஏற்றும் விளக்கு அணையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top