அடியேன் கேட்ட கேள்விக்கு ஆடி மாத சுதர்சனத்தில் பதில் கிடைத்தது. மேலும் சில ரஜஸ்வலை கால சந்தேகங்கள் : 1. எம்பெருமான் நம் அகத்தில் இருப்பதால் தீட்டு காக்கவேண்டும் நம் அகத்தில் அசுத்தி ஏற்படாமல் இருத்தல் வேண்டும் என்ற காரணம் புரிகிறது அந்தர்யாமியாக நம் ஹ்ருதயத்தில் இருக்கும் எம்பெருமான் ரஜஸ்வலை காலத்தில் நம் ஹ்ருதயகுகையிலிருந்து வெளியேறிவிடுவானா? என்று என் மகள் கேட்கிறாள். 2. அடியேனின் கேள்வியானது : எங்கள் அகத்தில் கடந்த 22 வருடங்களாக ரஜஸ்வலை காலத்தில் நானேதான் தளிகை பண்ணும்படியாக இருக்கிறது. என் அகத்துக்காரர் அலுவல்வேலைக்காகப் பயணம் செய்ய நேரிடும் . 3/4 நாட்களும் வெளியில் வாங்கிச் சாப்பிட முடியாது ஆகையால் நானேதான் தளிகை செய்யும்படி உள்ளது. 4ஆம்நாள் குளித்துவிட்டு அனைத்தையும் சுத்தம்செய்து மீண்டும் பெருமாளுக்குத் தளிகைச்செய்கிறேன்.இது தவறு என்றால் இதற்கு வேறு வழி இருக்கிறதா? மேலும் என் அகத்துக்காரர் அத்தனை உறுதுணையாக இல்லாததாலும் நானே அவர்க்கும் சேர்த்து அந்த3/4 நாட்களிலும் தளிகைப்பண்ணுகிறபடி உள்ளது. தெரிந்தே பல வருடங்களாக வேறு வழியின்றி பாபம் செய்கிறேன். இதற்கு பலமுறை எனக்குள்ளே அழுதும்கொண்டிருக்கிறேன். 3. எனக்கு ரஜஸ்வலை காலம் மட்டுமல்லாது இதர நாட்களும் எதிர்மறையான் எண்ணங்கள் இருக்கத்தான் செய்கிறது.அதையும் மீறி எப்படியோ பெருமாள் திருநாமங்களைச் சொல்கிறேன். இதற்கு என்னதான் வழி?

ஶரீரத்தில் இருக்கும் தோஷம் ஆத்மாவிற்கு கிடையாது. நம் ஶரீரத்தில் ஏதாவது அழுக்குபட்டால் உ.தா: கையில் பட்டால் கை அழுக்காயிற்று என்றுதான் சொல்லுவோமே தவிர நானே அழுக்காயிட்டேன் என்று சொல்லமாட்டோம். ஶரீரத்தில் இருக்கும் தோஷம் அலம்பிவிட்டால் சரியாகப் போய்விடும் அத்தோடு சரி. அதே மாதிரி நாம் அனைவரும் பகவானுக்கு ஶரீரமானபடியால் ஶரீரத்தில் தோஷமிருந்தாலும் அந்தத் தோஷம் பகவானுக்குயில்லை. ஶரீரத்தில் அவன் இருக்கிறதால் அவனுக்கு ஒரு குறைவும் கிடையாது அதனால் அப்போதும் அங்கேதான் இருப்பான்.
ரஜஸ்வலை காலத்தில் முடிந்தவரை நாம் தளிகைபண்ணாமல் இருப்பதுதான் நல்லது. வெளியில் வாங்கி சாப்பிடாமல் அக்கம்பக்கம் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அகத்திலாவது வாங்கிச் சாப்பிடலாம். இல்லாவிடில் முன்னமே ரொட்டி போன்றவை பண்ணிவைத்துக்கொண்டு அதை யாராவது இருந்தால் அவர்களைப் போடச்சொல்லி சாப்பிடலாம். தானே எடுத்துவைத்துக்கொண்டு சாப்பிடுவதென்பது சற்று கௌநம்தான் ஆனால் தளிகைபண்ணி சாப்பிடுவதைக்காட்டிலும் இது பரவாயில்லை.
வேறு வழியில்லாமல் தளிகைபண்ணுகிறேன் இது சரியா என்றால் சரி என்று சொல்லிவிட முடியாது ஏனென்றால் தளிகைபண்ணுவதே தவறு என்பதினால். வேறு வழியில்லை அதனால் பண்ணுகிறேன் எனலாம். ஆனால் முடிந்தவரை சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றை 3 நாட்களுக்கும் சேர்த்து பண்ணிவைத்துக்கொண்டு சாப்பிடுவதுதான் பரவாயில்லை என்று தோன்றுகிறது
தனக்குத்தானே தளிகைப்பண்ணி சாப்பிடுவதே தவறென்று இருக்கும்போது, வேறொருவருக்கு தளிகைப்பண்ணுவது என்பது நிஷித்தமான ஒன்றாகும். வேறுவழியில்லாமல் பண்ணுகிறோம் என்றாலும் அது சரியில்லை. இந்த நாட்களில் நான் பண்ணமாட்டேன் என்று உறுதியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவருக்கு ஈடுகொடுத்து அந்தத் தவறான கார்யத்தைப் பண்ணவேண்டிய அவசியமில்லை. பத்னீ என்பவள் சஹ தர்ம சார்ணீ. தர்மத்தில் கூட நடக்கவேண்டியவள். ஒருகால் பர்தா அதர்மம் செய்கிறார் என்றால் அது தவறு அப்படி நடக்கக்கூடாது என்று எடுத்துக்கூறி, அதர்மமான கார்யத்தில் துணைபோகாமல் அவரையும் நல்வழிப்படுத்தும் உபாயத்தை யோசித்து செய்யவேண்டும்.
எதிர்மறையான எண்ணங்கள் வரக்கூடாது என்ற எண்ணத்துடன் ஒரு ஈடுபாட்டுடன் பகவன் நாமங்களைச் சொல்லவேண்டும். எதிர்மறையான எண்ணங்கள் வரமால் இருப்பதற்கு மறுபடியும் மறுபடியும் அப்யாஸம் பண்ணவேண்டும். எம்பெருமான் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தால் எதிர்மறையான எண்ணங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு
குறிப்புகள்:
சிறுபெண்களுக்கு ரஜஸ்வலை காலத்தில் தனியாக இருப்பது ஏன் முக்கியம் என்று உணர்த்தவேண்டும். எம்பெருமான் யாரிடமும் இருந்து எப்போதும் நீங்குவதில்லை “உள்ளுவார் உள்ளிற்றெல்லாம்” என்று அனைவரிடமும் ரஜஸ்வலை காலத்திலும் எம்பெருமான் கூடவேஇருந்து கொண்டுதான் இருக்கிறான் என்று சொல்லிப் புரியவைக்கலாம்.
அந்த எம்பெருமான் உள்ளேயிருப்பதனால்தான் அந்தச் சமயத்தில் ஶரீரத்தில் ஏற்படுக் கஷ்டங்கள், மானசீகமான கஷ்டங்கள் (mood swings) போன்றவற்றை எம்பெருமான் பார்த்துக்கொண்டிருப்பதினால்தான் நமக்கு ஓரளவு ஸௌக்கியம் இருக்கிறது என்றும், சிரமங்கள் தெரியாமல் இருக்கிறது என்றும், அவனின் ஏற்பாடுதான் இந்த மாதிரி தனியாக இருந்து ஓய்வு எடுப்பதெனும் என்று சொல்லி நம் பழக்கவழக்கங்களின் மேன்மையை (positivity)நேர்மறையாகச் சொல்லி புரியவைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top