அடியேனுக்கு ஆசார்ய ஸம்பந்தம் இன்னும் ஏற்படவில்லை சில சந்தேகங்கள்: Q1. மாத்வ ஸம்பரதாயம் மற்றும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பரதாயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே விஷ்ணு பக்தர்கள் என்கின்ற ரீதியில் ஸ்ரீவைஷ்ணவர்கள்தான். ஆனால்கூட அவரவர்களுடைய கொள்கையில் வித்தியாசம் உண்டு. அதுதான் விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்பது‌. Q2. ப்ரபத்தி செய்தால் மோக்ஷம் என்று ஶாஸ்த்ரம் சொல்லுகிறது. பக்தி செய்தால் மோக்ஷம் கிடைக்காது என்று சொல்லவில்லை. பக்தி செய்தால் மோக்ஷம் கிடைக்காதா என்ற கேள்வியே சரியான புரிதல் இல்லாததினால் வந்திருக்கிறது என்று நினைக்கின்றேன். மோக்ஷத்திற்கு நேர்காரணமாக இந்த ப்ரபத்தி என்பது வருகின்றது. பக்தி என்பது ப்ரபத்தியை மூட்டி அந்த மோக்ஷத்திற்குக் காரணமாக அமையும். உதாஹரணத்திற்கு, பத்து படிக்கட்டு ஏறி 11ஆவது படிக்கட்டில் மாடிக்குப் போகமுடியும் என்கின்ற போது, பத்தாவது படிக்கட்டு ஏறினால்தான் மாடிக்குப் போக முடியுமா? 1,2 படிக்கட்டு ஏறினால் போகமுடியாதா என்று கேட்பது போல் இருக்கிறது. அந்த ரீதியில் பக்தி என்பது கட்டாயம் வேண்டும். அதில் ஒரு சந்தேகமும் இல்லை. Q3. பக்தியில் பல நிலைகள் உண்டு. சாதாரணமான பக்தி என்பது ஒரு மனிதனுக்கு யாராக இருந்தாலும் எப்போதுமே தேவை. ப்ரபத்திக்குக்கூட அந்தச் சாதாரணமான பக்தி தேவை. அது இல்லாமல் இருக்க முடியாது. ப்ரபத்தி என்று சொன்னால் அவன் பக்தி இல்லாதவன் என்று அர்த்தம் கிடையாது. பக்தியோகம் என்பது பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பது போல் தியானம் அது. அது நம்மால் பண்ணமுடியாது என்ற ரீதியில் இருக்கின்றது. ப்ரபத்தி பண்ணுபவனுக்கும் அடிப்படையான பக்தி கட்டாயம் இருக்கும். அதனால் அவன் பக்தி இல்லாதவன் என்று சொல்ல முடியாது. Q4. ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பண்ண உபநயனம் ஆகியிருக்கவேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது. Q5. மஹாலக்ஷ்மீ தாயாரும் ஸ்ரீமன் நாராயணனும் கட்டாயம் ஒருவர் கிடையாது. இரண்டு பேர்.

விசிஷ்டாத்வைதம் என்றால் எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாக பகவான் இருக்கின்றான். அந்தர்யாமி என்றால் உள்ளுக்குள்ளேயிருந்து நியமனம் பண்ணுபவராக பகவான் இருக்கிறான். பகவான் இல்லாத இடமே கிடையாது. இதை மாத்வ ஸம்பரதாயத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு ராஜா நியமனம் பண்ணுவதுபோல் பகவான் லோகத்தை ரக்ஷிக்கின்றான் என்று சொல்லுவார்கள். ராஜா வெளியில்யிருந்து கொண்டுதானே நியமனம் பண்ணிக்க கொண்டிருக்கிறான். ஆனால் இது அப்படிக்கிடையாது. எல்லா வஸ்துக்குள்ளும் அதாவது சேதனா/அசேதனா என அனைத்தின் உள்ளும் பகவான் ஆத்மாவாக இருக்கின்றான். அதனால்தான் அவனுக்குப் பரமாத்மா என்று பெயர். இந்த மாதிரியான ரீதியில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இதைக் காலக்ஷேபம் பண்ணிக் கேட்டுக்கொள்ளலாம்.
அதனால்தான் விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று பெயர். விசிஷ்ட அத்வைதம் என்றால் எல்லாத்தையும் சேர்த்து பகவான் இருக்கின்றபடியால் அதாவது சகல ஜகத் கூடவும் சேர்த்து இருக்கக்கூடிய பகவான் என்பவர் விசிஷ்டம், அவர் ஒருவர் தான் இருக்கின்றார்.
த்வைதம் என்றால் பகவான் வேறு ப்ரபஞ்சம் வேறு என்று பிரித்துச்சொல்வது த்வைதம்.
இரண்டு பேர் இருக்கிறார்கள் என்பது வாஸ்தவம். ஆனால் சேதனா/அசேதனா இவை இரண்டும் பகவானுக்கு விசேஷணமாக இருக்கின்றார்கள். எல்லாவற்றுக்குள்ளும் பகவான் இருக்கின்றார், மேலும் அவரை விட்டுப்பிரிந்து இருக்க முடியாது. எப்பொழுதுமே விசிஷ்டமாக கூடவே இருக்கின்றான். அதுவே விசிஷ்டாத்வைதம்.
ஸ்ரீவைஷ்ணவ தீக்ஷைப் பெற பூணூல் அணிந்திருக்கவேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது
பெருமாளின் அனுக்ரஹம் இல்லாமல் தாயார் மட்டும் தனித்து மோக்ஷம் அளிக்கமுடியுமா என்று கேட்டால், ஶாஸ்த்ரங்களில் அப்படிச் சொல்லவில்லை. ஶாஸ்த்ரம், வேதம், இதிஹாச-புராணம் எல்லாவற்றிலும் பெருமாள்-தாயார் திவ்யதம்பதிகளாக இருந்து மோக்ஷம் கொடுக்கிறார்கள் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் இதைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேதவிர தனியாக முடியுமா முடியாதா என்றெல்லாம் ஆலோசனையெல்லாம் பண்ணவேண்டாம். பொதுவாக க்ரந்தங்களில் என்ன சொல்லியிருக்கிறது, ஆழவார் ஆசார்யார்கள் என்ன சொல்லியிருகிறார்கள் என்றால், திவ்யதம்பதிகள் இரண்டுபேருமாக மோக்ஷம் கொடுக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top