1. குங்குமம் ஸமர்ப்பிக்க வேண்டும் என்பதாக எங்கேயும் சொல்லவில்லை. அதனால் அதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சந்தனம் மட்டுமே சொல்லி இருக்கிறது. முன்பே நாம் ஒரு விஷயம் பார்த்து இருக்கிறோம். குங்குமம் என்பது அசல் கிடையாது. அதனால் சந்தனம் ஸமர்ப்பித்தால் போதும். குங்குமம் என்பது நீங்கள் குங்குமப் பூவை சொல்கிறீர்களா என்று ஒரு சந்தேகம் இருக்கிறது. குங்குமப்பூவாக இருந்தால் அதை இழைத்து சந்தனத்துடன் சேர்த்து தாராளமாக ஸமர்ப்பிக்கலாம். இல்லை கடையில் விற்கும் குங்குமமாக இருந்தால் அதைப் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
2. திருவாராதனத்தில் உள்ள ஸேவாகாலம் (திருப்பாவை, திருப்பல்லாண்டு போன்ற ஆழ்வார் பாசுரங்களை அனுசந்தித்தல்) வடகலை ஸம்பிரதாயத்தில் உள்ளது. எல்லா இடத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோர் அகத்திலும் திருப்பாவை இல்லாமல் திருவாராதனை கிடையாது.
உங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம் வந்தது என்று தெரியவில்லை. ஏனென்று கேட்டால் எல்லா ஸம்ப்ரதாயத்திலும் திருவாராதனத்தின் போது இப்படிதான் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா அகங்களிலும் திருப்பல்லாண்டு திருப்பாவை அதேபோல் சிற்றஞ்சிறுகாலே சாற்றுமுறை இல்லாமல் திருவாராதனமே கிடையாது.
3. சிம்மம் என்பது ஶ்ரேஷ்டம் என்று பொருள் கொடுக்கக்கூடிய சொல். சிம்மாசனம், புருஷசிம்மம் என்றெல்லாம் சொல்லுவது போல். மிருகங்களிலே ஶ்ரேஷ்டமான ஒரு மிருகம், ராஜாவாக இருக்கக்கூடிய ஒரு மிருகம், சிம்மம். பெருமாள் என்பவர் உயர்ந்தவர் ஶ்ரேஷ்டமானவர், ராகவசிம்மம் என்று பெருமாளுக்குத் திருநாமம் இருக்கின்றது. அவருடைய பரிவாரங்கள் எல்லாமே மிக உயர்ந்தது.
கருத்மான் நமக்குத் தெரியும். மிருகங்களை வாகனமாகக் கொண்ட சிம்ம வாகனம் ஶ்ரேஷ்டம். அந்த அர்த்தத்தில்தான் இருக்கின்றதே தவிர வேறு தேவதாந்த்ர பரமாக இல்லை. தேவதாந்த்ரங்களுக்குச் சிம்மம் இருந்தால் அதை இங்கு உபயோகிக்கக் கூடாது என்று கிடையாது. ஶ்ரேஷ்டமான வஸ்து வைக்க வேண்டும் என்ற ரீதியில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவே. அதேசமயம் கருத்மானை மற்ற கோவில்களில் வைக்கக் கூடாது. ஏனென்றால் கருத்மான் என்பவர் ஒரு நித்யசூரி. வேதத்திலே சொல்லப்பட்டவர். பகவானுக்கு வாகனமாக புராணங்களிலே சொல்லப்பட்டவர். மஹாபாரதம் , அவருடைய திவ்ய சரித்ரம் முதலானவற்றில் அவர் பகவானுக்கு மட்டுமே தாசனாக, வாகனமாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார் என்றெல்லாம் இருக்கின்றது. அதனால் அதை மற்றவர்கள் வைக்கக் கூடாது. அதேசமயம் சிம்மம் அது ஶ்ரேஷ்டமானது என்கின்ற அர்த்தத்தில் அதை கோவில்களிலே வைக்கலாம்.