ப்ராயஶ்சித்த ப்ரபத்தியும் மோக்ஷ ப்ரபத்தி போல் ஆசார்யனிடம் சென்று செய்து கொள்வது மிகவும் உசிதம். பொதுவாகவே ப்ரபத்தி செய்வதற்கு நான்கு விதங்கள் உண்டு. என்று ஆசார்யார்கள் எல்லாம் ரஹஸ்ய க்ரந்தங்களில் எடுத்துரைத்துள்ளார்கள்.
ஆசார்யநிஷ்டை, உக்திநிஷ்டை, ஸ்வநிஷ்டை, பாகவதநிஷ்டை என்றெல்லாம் இருக்கிறது. ஸ்வநிஷ்டை என்கின்ற ரீதியில், தானே செய்துகொள்வது என்று இருக்கின்றது. ஆனால் அது இப்பொழுது வழக்கத்தில் இருக்கிற மாதிரி தெரியவில்லை. காரணம் இது ஒரு முக்கியமான காரியம் இந்தக் காரியத்திலே எந்த ஒரு குறைபாடும் ஏற்படக்கூடாது, அதனால் ஆசார்யன் ஆஶ்ரயித்து செய்தோமானால் கவலையில்லாமல் அந்தக் காரியம் நன்கு பலித்துவிடும் என்கின்ற நிஶ்சிந்தையுடன் நாம் இருக்கலாம். ஆனால் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றினால் ஆசார்யனிடத்தில் விண்ணப்பிக்கலாம். அவர் செய்து வைப்பார். அபசாரப்பட்ட பாகவதரிடத்தில் போய் அவசியம் க்ஷமாபணம் பண்ணிக் கொள்வது என்பது செய்ய வேண்டிய காரியம். அந்தத் தவறை நாம் உணர்ந்து விட்டோம், பாகவத அபசாரம் ஆகிவிட்டது என்று நமக்குத் தெரிந்து விட்டது என்றால் முதல் காரியமாக அவரிடத்தில் போய் சொல்லி அபராத க்ஷமாபணம் அவசியம் செய்துகொள்ள வேண்டும்.