யஜ்ஞம் ஸ்வாமி தனது வேத வைபவம் தொடரில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: 1. புத்தகங்களைப் பார்க்காமல் வேதங்கள் பாராயணம் பண்ண வேண்டும் 2. வேதங்களைக் கற்று, தினமும் பாராயணம் செய்யாமல், அதற்குப் பதிலாக ஸ்தோத்ரபாடம் போன்ற வேறு ஏதாவது பாராயணம் செய்வது பாவம். இவற்றிற்கான ப்ரமாணங்களை மேற்கோடிட்டுக் காட்டுமாறு ப்ரார்த்திக்கின்றேன்.

1. அதாவது லிகிதபாடம் கூடாது என்று பாணினியின் சிக்ஷையில் இருக்கிறது. சிக்ஷா என்ற க்ரந்தமானது வேதங்களை எப்படிக் கற்றுக்கொள்ளவேண்டும் எப்படி உச்சாடனம் பண்ண்வேண்டும் என்பதற்காக வந்தது. அதில் லிகித பாடங்கள் கூடாது என்றிருப்பதால் ஓரளவு புத்தகங்களைப் பார்க்காமல் சொல்லவேண்டும். அதுமட்டுமல்ல தாரணம் என்ற ஒன்று இருக்கு. வேதாத்யயனம் போல் மனத்திற்குள் தரித்து வைத்தாலே அதுவே ஒரு தர்மம்.
குரு முகமாய் அத்யயனம் பண்ணாமல் இவனே புத்தகம் பார்த்து சொல்வது கூடாது என்பதுதான் முக்கியமான விஷயம். மனப்பாடம் முடியாவிட்டால் புத்தகம் பார்த்துச் சொல்லலாம் தவறில்லை ஆனால் முன்னமே குருமுகமாய் அத்யயனம் பண்ணியிருக்கவேண்டும்.
2. ஸ்வாமி தேஶிகன் ஸ்ரீ பாஞ்சராந்த்ர ரக்ஷையில் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். ஸ்வாத்யாய காலத்தில் மற்றவையெல்லாம் சொல்வதைக் காட்டிலும் வேத ஜபம் செய்வது உசிதம் என்றுள்ளது. ஸ்வாத்யாய காலம் என்றால் ஆஹாரம் எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் காலமாகும். அந்தச் சமயத்தில் ஸ்ரீமத் இராமாயணம், ஸ்தோத்ர பாட பாராயணம், திவ்ய ப்ரபந்தம் முதலியவற்றை பண்ணிக் காலத்தைக் கழிக்கலாம். அந்தச் சமயத்தில் வேத பாராயணம் பண்ணுவது விசேஷம் என்று ஸ்வாமி தேஶிகன் ஸாதித்துள்ளார். மற்றவைகளைப் பாராயணம் செய்வது பாபம் என்ற அர்த்தத்தில் இல்லை. வேதத்தை உபேக்ஷை பண்ணிவிட்டு அப்படிப் பண்ணக்கூடாது என்ற அர்த்தமாகும். ஏனென்றால் வேதம் உயர்ந்தது ஆகவே அதைப் பாராயணம் செய்வது உசிதமாகும். மேலும் எந்த பாகத்தைப் பாராயணம் செய்வது என்பதையும் ஸ்வாமி தேஶிகனே ஸாதித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top