அடியேன் அஷ்டாக்ஷர ஜபம், காயத்ரிஜபம் போல் தினமும் மூன்று வேளையும் பண்ணவேண்டும் என்கிற விதி புரிகிறது. காயத்ரிஜபம் போல் எத்தனை எண்ணிக்கை வேண்டுமானாலும் பண்ணலாமா? ஸ்ரீ ஸ்ந்நிதி சிஷ்யர்கள் நித்யமும் ஆசார்ய தனியன், த்வயம், சரம ஶ்லோகம் அஷ்டாக்ஷ்ரம் சேவிக்கும் வழக்கமுள்ளது. சுதர்சனத்தின் சென்ற இதழில் அளிக்கப்பட்ட பதிலை அடியேன் சந்தியாவந்தனம் பண்ணும் சமயம் மட்டும் அஷ்டாக்ஷரம் செய்தால் போதும் என்று புரிந்துகொண்டேன் இது சரியா? அஷ்டாக்ஷரம் மற்ற நேரங்களில் பண்ணக்கூடாதா? ஆசார்யர்கள் வித்வான்கள் அஷ்டாக்ஷர ஜபம் பற்றி நிரம்ப பேசியிருக்கிறார்கள் மேலும் 45ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் பத்ரிநாத் எழுந்தருளியிருந்த போது அங்கே அஷ்டாக்ஷர ஜபம் செய்ததாக எப்போதோ ந்ருஸிம்ஹ ப்ரியாவில் படித்த ஞாபகம். ஸ்த்ரீகளுக்கு சந்தியாவந்தனம் செய்யும் விதியில்லை. அஷ்டாக்ஷரம் சந்தியாவந்தன காலத்தில் மட்டும் செய்தால் போதும் என்றால், ஸ்த்ரீகள் எப்படி பண்ணமுடியும்? ரிஷிகள் தபஸோ அல்லது ஜபமோ எந்த மந்திரம் கொண்டு செய்திருப்பார்கள் அஷ்டாக்ஷரம் தவிர. அடியேனின் புரிதலில் பிழையிருந்தால் க்ஷமிக்கவும்.

திருவஷ்டாக்ஷர ஜபம் என்பது சந்தியாவந்தனத்துடன் சேர்த்து பண்ணுவது தான் அதிகமாகவும் பண்ணலாம். அதனால் தான் பல இடங்களில் குறிப்பாக விசேஷமான சமயங்களில் திருவஷ்டாக்ஷர ஜபம் பண்ணும் வழக்கமுண்டு. ஸ்த்ரீகள் சந்தியாவந்தனத்திற்கு பதிலாகத்தான் திருவஷ்டாக்ஷர ஜபம் பண்ணுகிறார்கள். எப்படி என்பதை முன் சுதர்சன இதழ்களில் இருக்கிறது.
ரிஷிகள் தபஸ் ஜபம் போன்றவை பண்ண திருவஷ்டாக்ஷரம் தவிர வேறு பல மந்திரங்கள் உள்ளது வேத மந்திரங்களே இருக்கிறது. வேத பாராயணத்திற்கே ஜபம் என்று பெயர் உண்டு அதற்கு வேதவாக்யமே இருக்கிறது. ரிஷிகள் எல்லோரும் ஓயாமல் வேத பாராயணம் செய்து செய்து தான் நமக்கு வேதத்தைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். வேதத்திற்கென்று புத்தகம் கிடையாது அவர்களின் ஜபத்தின் மூலமாகதான் ரிக், யஜூர், சாம வேதங்கள் நமக்கு கிட்டியிருக்கிறது. அதாவது காட்டில் அவர்கள் சொல்லிக்கொண்டே போவார்களாம். அப்படிப் பாராயணம் மூலமாகதான் நமக்கு அவர்கள் காப்பாற்றி கொடுத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top