திருமஞ்சத்தில் இரண்டு உண்டு.
லோகாந்த திருமஞ்சனம்
ஏகாந்த திருமஞ்சனம்.
லோகாந்த திருமஞ்சனம் நமது சேவைக்காகவே. அப்போது பெருமாள் வஸ்திரங்கள் எல்லாம் தரித்துக் கொண்டிருப்பார். அதனால் அந்தத் திருமஞ்சனத்தைச் சேவிப்பதில் ஒன்றும் தவறில்லை.
ஆனால் பெருமாள் அமுது உண்ணும்போது அவரைச் சேவிப்பது, பார்ப்பது என்பதெல்லாம் ஒரு அபசாரம். ஏனென்றால் அவர், ஒரு தொந்தரவும், குறுக்கீடும் இல்லாமல் ஏகாந்தமாக அமுதுண்ண வேண்டும். அதனால்தான் பெருமாள் அமுது உண்ணும் போது சேவாகாலம் பண்ணக்கூடாது என்று சொல்வார்கள். அப்படிப் பெருமாள் அமுது செய்யும் போது சேவாகாலம் பண்ணால் பெருமாளுக்கு அதில்தான் ஶ்ரத்தை போகும். அவர் அமுது செய்வது குறைந்து போய்விடும். நாம் சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டால், எப்படிச் சாப்பாட்டில் ஶ்ரத்தை இல்லாது போய்விடுமோ அதேபோல் தான்.
அவர் நன்றாக அமுது செய்யவேண்டும், நன்றாக அமுது செய்யவிக்க வேண்டும். அதனால் மற்ற கார்யங்கள் எதிலும் அவருக்கு ஶ்ரத்தையோ, நோக்கமோ வராத ரீதியில் சேவார்த்திகள் சேவையைத் தவிர்க்க வேண்டும். கீழே விழுந்து சேவிப்பது, சேவாகாலம், பாராயணம் முதலானவைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் நாம் யாரும் பார்க்கவும் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள், பார்த்தால் பெருமாள் நம்மை பார்க்கவேண்டி இருக்கும். அவருடைய கவனக்குறைவு என்பதெல்லாம் ஏற்படக்கூடாது என்பதற்காக எம்பெருமான் அம்சை பண்ணும்போது திரையிடுகிறார்கள்.