புரட்டாசி சனிக்கிழமையில் ப்ரபந்னர்கள் விளக்கு அவசியம் ஏற்றலாம். அதில் எந்தவித தோஷமும் தவறும் கிடையாது. வெறும் மாவை கலந்து அம்சை பண்ணவேண்டும், ஏற்றக்கூடாது என்றெல்லாம் கிடையாது. நிறைய பெரியோர்கள் க்ருஹங்களில் விளக்கேற்றி நன்றாகக் கொண்டாடுகிறார்கள். அதனால் அப்படிச் செய்யலாம்.
அதைத் தவிர ப்ரஹ்மோற்சவம் நடக்கும் சமயங்களில் சில க்ருஹங்களில் விளக்கேற்றுவதில்லை. அது அவரவர் க்ருஹ வழக்கம். அப்படி வழக்கமில்லை என்றால் ப்ரஹ்மோற்சவம் நடக்கும் சனிக்கிழமையில் ஏற்ற வேண்டாம். நவராத்திரியின் போது ஏற்றுவது என்பது சில க்ருஹங்களில் வழக்கமாக இருக்கின்றது. அதுவும் தவறு கிடையாது. அதாவது சில க்ருஹங்களில் விளக்கேற்றுவதற்கு, புரட்டாசி சனிக்கிழமை நவராத்திரியில் வரும் சனிக்கிழமையாக இருக்கவேண்டும் என்கின்ற பழக்கமே இருக்கின்றது. அதனால் அதிலும் தவறு கிடையாது. மஹாளயபக்ஷத்தில் வரும் சனிக்கிழமையில் பொதுவாக ஏற்றுவது இல்லை ஆகையால் அதைத் தவிர்க்கலாம்.
இந்தக் காரணங்களால் ஐப்பசி சனிக்கிழமையில் விளக்கேற்ற வேண்டும் என்பது எந்த இடத்திலேயும் வழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை .புரட்டாசி சனிக்கிழமையில் ஏற்றுவதுதான் திருவேங்கடமுடையானுக்கு உசத்தி . அப்பேர்ப்பட்ட சனிக்கிழமை கட்டாயம் நேரும். அந்தச் சமயத்தில் அவசியம் ஏற்றலாம்.