ஸ்வாமி தேஶிகனுக்கு ஒரே சிஷ்யர் ஒரே ஸம்ப்ரதாயம் என்று இல்லை. நிறைய சிஷ்யர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக நிறைய பரவி இருக்கிறது.
இது தேஶிகருக்கு மட்டும் இல்லை, பகவத் இராமானுஜர் காலத்திலிருந்தே, இராமானுஜர் வரைக்கும் ஒரே ஸம்ப்ரதாயம். இராமானுஜருக்குப் பின் அவருக்கு அநேக சிஷ்யர்கள். அவர் 74 ஆசார்யர்களை நியமித்தார் என்று இருக்கின்றது. அதனால் 74 விதமாக அந்தப் பரம்பரை வருகிறது. அப்படி வரும்போது சின்னச்சின்ன விஷயங்களில், அனுஷ்டானம் முதலான விஷயங்களில் அபிப்ராய வித்யாசம் வரும். அது வந்ததால் அதுவே ஒரு ஸம்ப்ரதாயமாக மாறிப்போய் விடுகிறது. இதெல்லாம் ஶாஸ்த்ர அனுமதம். ஸ்வாமி தேஶிகனே இதைச் சொல்லியிருக்கிறார். அதாவது “தேச காலாதி பேதத்தினாலே ஆசார அனுஷ்டான பேதங்கள் எல்லாம் ஶாஸ்த்ர சம்மதம்” என்று.
அதனால் தேசத்திலேயோ, காலத்திலேயோ இதை அனுசரித்து ஸம்ப்ரதாயத்தில், ஆசாரத்தில், அனுஷ்டானத்தில் வித்யாசங்கள் எல்லாம் வரும். எல்லா தேசத்திலும் ஒரே மாதிரி ஆசாரம் இருக்காது என்று ஶாஸ்திரமே இதை ஒத்துக் கொண்டுள்ளது. அந்த ரீதியில் இது ஶாஸ்த்ர சம்மதம்தான். ப்ரதானமான விஷயம் என்னவென்றால் ஸ்ரீமன் நாராயணனே பரதத்துவம். அவனிடத்தில் ஶரணாகதி பண்ண வேண்டும். தேஶிகன் ஸம்ப்ரதாயத்தில் அதில் நமக்குள் எந்த ஒரு வித்யாசமும் கிடையாது.