க்ரஹண காலத்தில் கொடுக்கும் தானத்திற்கு தோஷம் கிடையாது. க்ரஹண காலத்தில் தானம் கொடுக்கலாம், தானம் வாங்கலாம் ஒரு தோஷமும் (இருவருக்கும்) ஒட்டாது.
க்ரஹண காலத்தில் திருவாராதனம், திருமஞ்சனம் இதெல்லாம் விசேஷம் என்று இருக்கின்றது. கோயில்களில் எல்லாம் பல ஸம்ஹிதைகள் இருக்கிறது, அதில் பல ஸ்ம்ப்ரதாயங்கள் உண்டு. பாஞ்சராத்ர ஸம்ஹிதைகளே நிறையஉண்டு. அந்தந்த ஸம்ஹிதைகளை அனுசரித்து அந்தந்தக் கோயில் ஆசாரம் என்பதும் நிறைய உண்டு. ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் அதை அனுசரித்து அவர்கள் அந்த மாதிரி செய்கிறார்கள். பெருமாளுக்குட்பட சுத்தி செய்ய வேண்டும். இதெல்லாம் எத்தனையோ ஆகமங்கள், ஶாஸ்த்ரங்கள், ஸ்ம்ப்ரதாயங்கள். இவை எல்லாமே ஶாஸ்த்ர அனுமதம் என்று வைத்துக் கொள்ளலாம்.
புண்யகாலம் என்றால் மிகவும் விசேஷமான காலம் என்கின்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அந்த க்ரஹண காலத்தில் ஸ்நானம், தர்ப்பணம் முதலானது எல்லாம் விசேஷம் என்று இருக்கின்றது. அந்த அடிப்படையில் அது புண்யகாலம் என்று சொல்லியிருக்கின்றது. அதைத்தவிர க்ரஹண கால தோஷம் என்று ஒன்று உண்டு. அந்தத் தோஷம் அதில் எப்போதுமே இருந்து கொண்டு இருக்கிறது. ஒரு விதத்தில் அது புண்யகாலம் என இருக்கிறது என்பதற்கு உதாரணமாக தானத்தை எடுத்துக் கொண்டால் சாதாரண காலத்தில் செய்யும் தானத்தை விட க்ரஹண காலத்தில் செய்யும் தானம் மிகவும் விசேஷமானது. அதனால் ஸ்நானம், தர்ப்பணம், திருவாராதனம், ஜபம், தானம் இவையெல்லாம் விசேஷமாக அதில் நடக்கின்றபடியாலும், விசேஷமான பலனைக் கொடுக்கும் என்று சாஸ்த்ரம் சொல்லியிருக்கும் படியினால் அதற்கு புண்யகாலம் என்று பெயர். அதே சமயத்தில் க்ரஹண காலத்திற்கு மற்ற விதத்தில் பார்க்கும் போது அதற்கு தோஷம் என்று ஒன்று உண்டு. அதனால் இது ஒரு விதத்திலும், அது ஒரு விதத்திலும் ஆகும். அதில் ஒரு விரோதமும் கிடையாது.
விமோசன ஸ்நானம் செய்த பின் ஒன்றும் கிடையாது. அன்றைய தின அனுஷ்டானங்களைத் தொடர்ந்து பண்ண வேண்டும்.