உபன்யாசகர் ஆக வேண்டும், பகவத் விஷயங்களைப் பேசவேண்டும் என்றால் முதலில் பகவத் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு ஸதாசார்யன் மூலமாக விஷயங்களை நன்கு க்ரஹித்துக் கொள்ளவேண்டும். காலக்ஷேபாதிகள் எல்லாம் பண்ணவேண்டும். அதற்கு பிறகு ஆசார்யன் நியமித்தால் மட்டுமே விஷயங்களை வெளியேபோய் சொல்லவேண்டும். அவருடைய அனுமதி பெற்றுதான் விஷயங்களை வெளியே போய் சொல்ல வேண்டும். ஆசார்யன் நியமித்தால்தான் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்.
ஸத்ஸம்ப்ராயத்தில் வராதவர்கள் எல்லாம் விஷயங்களைச் சொல்லுவது என்பது சரியல்லதான். அதாவது அது ஸம்ப்ரதாய விஷயமாக ஆகாது. அவர்கள் பேசுவது வேறு பேச்சாக இருக்கலாம். ஆனால் அதை ஸம்ப்ரதாய விஷயமாக கருத முடியாது. அதை ஸ்ரீ வைஷ்ணவ ஸத்ஸம்ப்ரதாயத்தில் இருப்பவர்கள்போய் கேட்க வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. இதே ஒரு ஸதாசார்யன் மூலமாக உபதேசங்களைப் பெற்று அந்த ஆசார்யன் நியமனத்தின் பேரில் ஒருவர் விஷயம் சொல்லுவரேயானால் அந்த விஷயங்களைக் கேட்பதில் தவறில்லை. அந்த விஷயங்களை ஸ்த்ரீகள் சொன்னாலும் சரி அல்லது ப்ராமணர்கள் அல்லாதவர் ஒருவர் விஷயத்தை ஸதாசார்யனிடத்தில் கேட்டுக் கொண்டு அதை அவர் சொல்ல வெளியே சென்று நான்கு பேருக்குச் சொன்னாலும் அது தவறல்ல. ஆனால் YouTubeல் இந்த மாதிரி ஹிந்து அல்லாதவர்கள், எந்த ஒரு ஸத் உபதேசங்களையும் பெறாதவர்கள் எல்லாம் சொல்லக்கூடிய விஷயங்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.