இந்தக் கேள்வியில் ராமானுஜ சம்பந்தம் இல்லாத ப்ராமணர் அல்லாதவர்கள் என்று போட்டிருக்கிறது. இந்தக் கேள்வி கொஞ்சம் வேடிக்கையாகதான் படுகிறது. ஏனென்றால் தேசிகருடைய ஸ்ரீஸூக்திகளைச் சேவிக்கணும்னு ஒருவர் நினைத்தால் அவருக்கு ராமானுஜ சம்பந்தம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? அந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் பரம்பரையில் வரவில்லை என்றால் தேஶிகன் ஸ்ரீ ஸூக்தியை வாசிக்க ஆசை எப்படி ஏற்படும் என்று அடியேனுக்குப் புரியவில்லை. அதனால் பாதுகா ஸஹஸ்ரம் கற்றுக் கொள்கிறார்கள் சேவிக்கணும் என்று நினைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தேசிகனிடத்தில் ஒரு ருசி இருக்கிறது என்று தெரிகிறது. தேஶிகனிடத்தில், தேஶிகன் விஷயத்தில் ஒரு ஈடுபாடு இருக்கிறது என்று தெரிகிறது. அதனால் ராமானுஜ ஸம்ப்ரதாயத்திலும் ஈடுபாடு இருக்கிறதாகதான் புரிகிறது. அதனால் இதைக் கற்றுக்கொண்டு அகத்தில் அவரவர் த்ருப்திக்குச் சேவிப்பது சரியாகத்தான் தோன்றுகிறது.
ஆனால் கோவில்களில் சேவிப்பதற்கு பல நியமங்கள் உண்டு. அந்த நியமங்களின் ப்ரகாரம் எந்தக் கோவில்களில் எப்படிச் சொல்கிறார்களோ அப்படித்தான் சேவிக்க முடியும். திவ்ய தேச கோவில்களில் கோஷ்டியினரை தவிர வேறு யாரும் சேவிப்பதற்கு அனுமதி கிடையாது. நவீனமாக ஏற்பட்ட கோவில்களில் எல்லாம் எல்லாரும் சேவிக்கலாம் என்று வந்து கொண்டிருக்கிறது. ஆனால் பொதுவாக ப்ராமணர் அல்லாதவரோ அல்லது ராமானுஜ சம்பந்தம் அல்லாதவரோ கோவில்களில் சேவிப்பது பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதாகத் தெரியவில்லை.