மாத்யாஹ்நிக ஸ்நானம் பற்றிய சில சந்தேகங்கள்: 1. பெருமாள் சேவிக்க கோவிலுக்குச் சென்று வந்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் பண்ணலாமா? (உ.தா தனுர் மாத காலத்தில் பிம்மாலையே பெருமாள் சேவிக்க போகும்படி இருக்கும்) 2. மார்கழி மாதத்தில் சாப மாச திருவாராதனம் பிம்மாலையே செய்கிறோம். அந்தத் திருவாராதனம் செய்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்துவிட்டு இஜ்யாராதனம் பண்ணி பெருமாளுக்குத் தளிகை அம்சை பண்ணலாமா? 3. ஸங்க்ரமண புண்யகாலத்தில் பிம்மாலை தர்ப்பணம் பண்ணும்படி வந்தால், மாத்யாஹ்நிக ஸ்நானம் மற்றும் இஜ்யாராதனத்தை மத்யானம் பண்ணலாமா? 4. அப்யங்க ஸ்நானம் (எண்ணெய் தேய்த்து தீர்த்தமாடுதல்) என்பது ப்ராத ஸ்நானம் செய்தபிறகுதான் செய்யவேண்டும் என்று தர்மஶாஸ்த்ரம் சொல்கிறது. அப்படியென்றால், தீபாவளி பண்டிகையன்று ப்ராத ஸ்நானம் மற்றும் ப்ராத ஸந்தியாவந்தனம் (பிம்மாலையே)செய்துவிட்ட பின்னர்தான் தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா? 5. தர்பபணம் மற்றும் மாத்யாஹ்நிகம்,பெருமாள் திருவாராதனம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா?

பெருமாள் சேவிக்க கோவிலுக்குச் சென்று வந்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் பண்ணலாம். பொதுவாக கோவிலுக்குச் சென்று வந்தபின் மேலே பட்டுவிட்டது என்று ஸ்நானம் பண்ணக்கூடாது அது அபசாரம். ஆனால் மாத்யாஹ்நிக ஸ்நானம் என்பது நித்யகர்மா என்பதாலும், அதற்கென்று தனியாகச் சங்கல்பம் (கர்மன்யதா சித்யர்த்தம் மாத்யாஹ்நிக ஸ்நானம் அஹம் கரிஷ்யே – என்ற சங்கல்பம்) உண்டு என்பதாலும், நித்யபடி மாத்யாஹ்நிகம் பண்ணுபவர்களாக இருந்தால் கோவிலுக்குச் சென்று வந்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் பண்ணலாம்.
மார்கழி மாதத்திலும் மேல் சொன்னதுபோல் தனுர்மாத திருவாராதனம் செய்துவிட்ட பின் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்துவிட்டு அதன்பின் இஜ்யாராதனம் பண்ணி பெருமாளுக்குத் தளிகை அம்சை பண்ணலாம்.
ஸங்க்ரமண புண்யகாலத்தில் பிம்மாலை தர்ப்பணம் பண்ணும்படி வந்தால், தர்ப்பணம் பிம்மாலை பண்ணியபின் மத்யானம் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்து மாத்யாஹ்நிகமும் இஜ்யாராதனமும் பண்ணலாம்.
அப்யங்க ஸ்நானம் என்பது ப்ராதஸ்நானம் செய்தபிறகு சந்தியாவந்தனமெல்லாம் பண்ணிவிட்டு 6 நாழிகைக்குப் பிறகுதான் பண்ணவேண்டும் என்று இருக்கிறது. அதற்கு முன் பண்ணக்கூடாது. ஆனால் தீபாவளியன்று விசேஷ விதி உண்டு, சூர்யோதயத்திற்கு முன்னர் அப்யங்க ஸ்நானம் பண்ணவேண்டும் என்றும், அப்படிச் செய்வது மிகவும் விசேஷம் என்று தர்மஸாஸ்திரங்களிலும் சொல்லியிருக்கிறது. மேலும் அது பகவான் க்ருஷ்ணனின் நியமனப்படி நடக்கக்கூடியது என்று யாதாவாப்யுதயத்தில் ஸ்வாமி சாதித்திருக்கிறார். ஆகையால் தீபாவளியன்று காலையிலே அப்யங்க ஸ்நானம் பண்ணிவிடனும் அதற்குப் பிறகுதான் சந்தியாவந்தனம் எல்லாம் பண்ணவேண்டும்.
தர்பபணம் மற்றும் மாத்யாஹ்நிகம்,பெருமாள் திருவாராதனம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. முதலில் மாத்யாஹ்நிகம், பெருமாள் திருவாராதனம் அதன்பின் தர்ப்பணம் என்பதாக ஸம்ப்ரதாயம்.
குறிப்புகள்:
க்ருஹஸ்தர்களுக்கும், ஸந்யாசிகளுக்கும் நித்யபடி மாத்யாஹ்நிக சங்கல்ப ஸ்நானம் செய்து மாத்யாஹ்நிகம் பண்ணுவதென்பது விசேஷமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top