மணவாளமாமுனிகளும் ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யர் என்கின்ற ரீதியில் அவருடைய திருநக்ஷத்ரத்தைக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அவரவருடைய ஸம்ப்ரதாயத்தில் அவரவர்களுடைய ஆசார்யன் திருநட்சத்திரத்தை அவசியம் கொண்டாடவேண்டும். அதைச் செய்தாலே போதுமானது.
பெருமாளுக்கு ஆசார்யன் என்று ஒருவர் உண்டா?
பீதகவாடை பிரானால் பிரமகுருவாயிருந்து (பிரமகுரு என்றால் ப்ரதம குரு என்று அர்த்தம்). பெருமாள் தான் ப்ரதமாசார்யார். அதனால் பெருமாளுக்கு ஆசார்யார் ஒருவர் உண்டா என்பதையும் யோசிக்க வேண்டும்.
பெருமாளுக்கு ஆசார்யன் என்று சொல்வது ஒரு உபசார வார்த்தையே ஆகும். நம் குருபரம்பரையில் பெருமாள்தான் முதல் ஆசார்யன். பெருமாளைப் பற்ரி ஆசார்யன் சொல்லும்போது ஸ்வாமி தேஶிகன் “இவர் ஒருவனே ஆசார்யன் இல்லாத ப்ரதமாசார்யன்” என்பதாக ஸாதித்திருக்கிறார். மேலும் ஞானமில்லாத சிஷ்யனுக்கு ஞானத்தைக் கொடுப்பவர்தான் ஆசார்யன். பெருமாளோ ஸர்வக்ஞன், அவன் ஞானமில்லாத சிஷ்யனும் இல்லை அப்படியிருக்கும்போது ஆசார்யன் என்று ஏன் சொல்கிறார்கள் என்றால், பெருமாள் தன் அவதாரங்களில் அபிநயம் செய்வதுண்டு. அதாவது ஸ்ரீராமாவதாரம், ஸ்ரீக்ருஷ்ணாவதாரங்களில் சிஷ்யனாக அபிநயம் செய்வதுபோல்தான் இதுவும். அதை வைத்துக்கொண்டு ஆசார்யன் என்று சொல்லுவதெல்லாம் ஒரு உபசார வழக்கே. மேலும் பெருமாளே இறங்கிவந்து இவர் எனக்கு ஆசார்யன் என்றெல்லாம் சொல்லவில்லை.. நாம் மட்டும் அல்ல ஸம்ப்ரதாயத்தில் எல்லோருமே இது ஒரு உபசார வழக்கு என்றுதான் சொல்லுகிறார்கள்.
இதை வைத்துக்கொண்டுப் பார்த்தால் பெரியபெருமாள் ஸ்வாமி தேஶிகனைத்தான் “ஸ்ரீவேதாந்த ஆசார்யன்” என்று சாதித்தார். ஆகையால் ஸம்ப்ரதாய பேதமில்லாமல் எல்லா மனிதர்களுக்குமே, வேதாந்தத்திற்கு ஆசார்யன் ஸ்வாமி தேஶிகன் என்பது ஸ்ரீரங்கநாதனுடைய திருவுள்ளமாகும்.
வ்யாக்யானங்களில் உள்ள பேதங்களினாலே ஸம்ப்ரதாய பேதங்கள் வருகின்றன. ஒவ்வொரு ஆசார்யரும் ஒவ்வொரு ரீதியில் வ்யாக்யானிக்கின்றார்கள். அவரவர்களுக்கு அவரவருடைய ஆசார்யன் செய்த வ்யாக்யானமே சரி என்று தோன்றுகிறது. அதனால் சித்தாந்த பேதம் காலக்ரமேன ஸம்ப்ரதாய பேதமாக மாறி இருக்கின்றது.
குறிப்புகள்:
பெருமாளுக்கு ஆசார்யன் என்று சொல்லப்படுவதினால் அவருடைய திருநக்ஷத்ரத்தைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லுவது சரியா என்று தெரியவில்லை. ஏனென்றால் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் ப்ரசித்தமான அதாவது இராமாயணத்தில் இராமனுக்கு ஆசார்யனான வசிஷ்டருடைய திருநக்ஷத்ரத்தையோ மகாபாரதத்தில் ப்ரமாணபூர்வமாக அறியப்படுகின்ற கிருஷ்ணனுக்கு ஆசார்யனான சாந்திபினினுடைய திருநக்ஷத்திரத்தையோ நாம் கொண்டாடுவதில்லையே. அதனால் பெருமாளுக்கு ஆசார்யன் என்பதனால் கொண்டாடப்பட வேண்டும் என்றில்லை.